இத்தாலியில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பின் இலங்கை வந்த தமிழரின் சடலம்
13 Apr,2019
இலங்கையில் உள்ள சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(49). இவர் கடந்த 1983ம் ஆண்டு வேலை செய்வதற்காக இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பணிப்புரிந்த அவர், 1994ம் ஆண்டு மே மாதம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். இலங்கையில் அந்த சமயம் போர் தீவிரமாகியிருந்தது.
இதனால் ஸ்டீபனின் சடலத்தை தாய்நாட்டிற்கு எடுத்து வர இயலவில்லை. இதையடுத்து அங்கிருந்த அவரது உறவினர்கள் இத்தாலி அரசிடம், இலங்கையில் நடைபெற்றுவரும் போர் குறித்து எடுத்துக்கூறி அங்கேயே பதப்படுத்தி வைக்க அனுமதி பெற்றனர்.
இந்த தகவலை, இலங்கையில் போர் சூழல் சற்றும் குறையாததால் ஸ்டீபனின் குடும்பத்தினருக்கு கூறவில்லை. கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. குடும்பத்தினருக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.
அப்போது ஸ்டீபனின் குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தனர். இதனால் ஏற்படும் சட்ட சிக்கல்களை சமாளிக்க முடியாததால் உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர இயலவில்லை.
இந்நிலையில் ஸ்டீபன் இறந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன் தினம் சாவகச்சேரிக்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சாவகச்சேரியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது