சீனா தொழில் பூங்கா அமைத்தாலும் ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் - ரனில் விக்ரமசிங்கே உறுதி
08 Apr,2019
இலங்கையில் உள்ள ஹம்பன்தோடா துறைமுக பகுதியில் மிகப்பெரிய தொழில் பூங்காவை சீனா அமைக்கிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாகவும், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய 3-வது ஆசிய ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 2 நாள் மாநாட்டில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்லுறவு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஹம்பன்தோடா துறைமுகம் சீன ராணுவ தளமாக மாறிவிடும் என்று சிலர் நினைப்பது தவறானது என்றும், அங்கு இலங்கை கடற்படை முகாம்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.