இலங்கை படைகள் வசம் இருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
07 Apr,2019
இலங்கையில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே, மேற்படி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
விடுவிக்கப்பட்ட காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும், 90 சதவீதமான தனியாருக்குரியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 6வது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
2009ம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,675 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன.
இந்த நிலையில், 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், படையினரிடமிருந்த காணிகள் துரிதமாக விடுவிக்கப்பட்டதாகவும், அந்த வகையில், 2019 மார்ச் மாதம் 31ம் தேதி வரையில், பாதுகாப்பு படைகள் வசம் இருந்து வந்த 84,675 ஏக்கரில் 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி அமர்வின்போது தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6,951 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இன்னும் 475 ஏக்கர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது படைகள் வசம் 13,497 ஏக்கர் காணிகளே உள்ளதாகவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் முதலாவது அமர்வு கடந்த வருடம் ஜுலை மாதம் 31ம் திகதி நடைபெற்றது.