இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் அதிகாரங்களை அதிகரிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம்
05 Apr,2019
புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாக பாதுகாப்புப் படையினர், மற்றும் காவல்துறையினருக்கும் அதிகாரங்களை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிய புத்திஜீவிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் இச் சட்டத்தின் உண்மையான நோக்கம் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது அல்ல என்றும் மாறாக இந்த ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும் என்றும் அவ் அமைப்பு கூறியுள்ளது.
இலங்கை அரசாங்கம் உருவாக்கி வரும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் பேசிய தேசிய புத்திஜீவிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அனில் ஜயந்த, பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கருத்தை தாங்கள் ஆதரிப்பதாகவும் அதற்குப் பதிலாக அரசாங்கம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்ற புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அதிகாரத்தை அதிகரிப்பதன் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அரசாங்கம் முழுவதும் ஊழல் நிறைந்த அரசாக மாறியுள்ளதாகவும் அதற்கு எதிராக எதிர்வரும் காலங்களில் மக்கள் கிளர்ந்து எழுவதனைத் தடுக்கும் நோக்கிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதற்காகவும் மேலும் தெரிவித்தார்.