இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக்
04 Apr,2019
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரஊப் ஹக்கீம்; "யுத்த காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்கப்படும் என்பதில், அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போது; "முஸ்லிம் தலைவர்கள் எவரும் இவ்வாறான கருத்துக்களை இதற்கு முன்னர் தெரிவித்திருக்காத நிலையில், ரஊப் ஹக்கீம் இப்படிக் கூறியது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
"யுத்த காலத்தில் பல ஆயிரம் குழந்தைகள் பட்டினி போடப்பட்டு சாகடிக்கப்பட்டார்கள். ரசாயனக் குண்டுகள் வீசப்பட்டு மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது இலங்கையிலிருந்த எந்தவொரு முஸ்லிம் தலைவரும் எங்களுக்காகப் பேசவில்லை".
"மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது, இதே ரஊப் ஹக்கீம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் போய் நின்று கொண்டு, இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை என்றும், யுத்தக் குற்றங்கள் எவையும் இங்கு நடைபெறவில்லை எனவும், யுத்தத்தில் இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்றும் கூறியிருந்தார். அதன்போது இவருடன் டக்ளஸ் தேவாந்தாவும் சேர்ந்து கொண்டு, இதே கருத்தைத் தெரிவித்தார்".
"ஆயினும் அதன் பின்னர், ரஊப் ஹக்கீம் இவ்வாறான எதிர்க் கருத்துக்களைக் கூறாமல் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால், இப்போது தன்னுடைய ராஜ விசுவாசத்தைக் காட்டும் பொருட்டு, தனது மதத்துக்குப் புறம்பாகவும் அல்லாவுக்கு மாறு செய்யும் வகையிலும் பேசுகின்றார்" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிபிசிக்கு தெரிவித்தார்.
கேள்வி: தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் நிற்காது என்று, ரஊப் ஹக்கீம் அடிக்கடி கூறி வருகிறார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நட்புறவானதொரு அரசியலைத்தான் அவர் மிக நீண்ட காலமாக மேற்கொண்டும் வருகின்றார். இந்த நிலையில், இவ்வாறாதொரு கருத்தை ஹக்கீம் வெளியிட்டமைக்கு காரணம், என்னவாக இருக்கலாம் என நீங்கள் நம்புகிறீர்கள்?
பதில்: கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு தமிழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றமைக்கு எதிராகவே, இவ்வாறானதொரு கருத்தை ரஊப் ஹக்கீம் வெளியிட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
கல்முனை உப பிரதேச செயலக விடயத்தில் தமிழர்கள் அடக்கி வாசிக்காது விட்டால், இவ்வாறான கருத்துக்களை உரத்த குரலில் நாங்கள் தெரிவிப்போம் என்பது போலவே, ஹக்கீமுடைய இந்தக் கருத்து உள்ளது.
கேள்வி: அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்துக்கு எவ்வாறு வாக்களிப்பதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது?
பதில்: அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்கவுள்ளோம். ஆனால், அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதையோ, அரசாங்கத்துடன் சேர்ந்து நாங்கள் இயங்குவதையோ எங்களுடைய மக்கள் விரும்பவில்லை.
அதனால் நாங்கள் திரிசங்கு நிலையில்தான் உள்ளோம்.
அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் வாக்களித்தால், இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடும். அப்படி நடந்தால், மஹிந்த ராஜபக்ஷ அல்லது கோத்தாபய ராஜபக்ஷதான் ஆட்சி பீடமேறுவர். அவர்கள் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் ஆதரவாக இருக்க முடியுமா என்கிற கேள்வி உள்ளது.
ஆனாலும், இப்போதுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதை எங்களுடைய மக்கள் நூறுவீதம் எதிர்க்கின்றார்கள்.
கேள்வி: அப்படியென்றால் மக்களின் அபிப்பிராயங்களுக்கு முரணாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: ஆம் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மக்களின் அபிப்பிராயத்துக்கு எதிராகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது.
இந்த விடயத்தில் எங்கள் பக்கமுள்ள நியாயத்தை மக்களிடம் கூறினால், அதனைக் கிரகித்துப் புரிந்து கொள்ளக் கூடியவர், 10 வீதமானவர்களே உள்ளனர். ஏனையவர்கள் நாம் சொல்வதைக் கிரகிக்கக் கூடிய சூழலில் இல்லை.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் வீதிகளில் உள்ளனர். சிறைக் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், எந்த நிபந்தனையுமின்றி அல்லது எதையும் பெற்றுக் கொள்ளாமல் அரசாங்கத்துக்கு ஆதரவாக நாங்கள் கைகளை உயர்த்திக் கொண்டிருக்கிறோம் என்கிற பார்வைதான் மக்களிடமுள்ளது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் சில விடயங்களைக் கையாள்வதில் சிறிது முன்னேற்றம் காட்டியுள்ளது. புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்காக, அரசியலமைப்பின் இறுதி வரைவினை இந்த அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
எனவே, இவ்வாறானவற்றின் அடிப்படையில் எமக்கு ஏதாவது கிடைக்கும் எனக் கருதுகின்றோம்.
மறுபுறமாக, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதைத் தவிரவும், வேறு மாற்று வழிகளும் எமக்குத் தெரியவில்லை" என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
இதேவேளை, அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்படி கண்டனத்தைத் தெரிவித்த போது, சபையில் ரஊப் ஹக்கீம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.