பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சீருடை வழங்கப்படும் : ஜனாதிபதி
30 Mar,2019
தற்போது பாவனையிலுள்ள காக்கி சீருடைகளுக்குப் பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு பொருத்தமான சீருடையொன்றை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக தான் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலிசார் தொடர்பில் மக்களிடையே நிலவும் எதிர்மறையான எண்ணங்களை மாற்றி தரமும் கௌரவமுமிக்க பொலிஸ் சேவை ஒன்றினை கட்டியெழுப்புவதற்காக பொலிஸ் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் உள்ளார்ந்த மாற்றங்களின் மற்றுமொரு நடவடிக்கையாக எதிர்காலத்தில் பொலிஸ் சீருடையில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி தான் பொலிஸ் திணைக்களத்தினை கையேற்று கடந்து சென்றுள்ள சில மாதங்களுக்குள் அதன் தரத்தினை மேம்படுத்துவதற்கும் பல உள்ளார்ந்த மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக மட்டுமன்றி சுற்றாடலை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளை வழங்குவதிலும் பொலிஸார் நிறைவேற்றும் பணிகளை ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜனாதிபதி அவர்களுக்கு
இதன்போது நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மேல் மாகாண சபை உறுப்பினர் சுமித் விஜயமுனி சொய்சா, அவிசாவளை ஐக்கிய தேசியக் கட்சி ஒருங்கிணைப்பாளர் லெனால்ட் கருணாரத்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனிடையே தமது வைப்பு நிதியை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரி மேல் மாகாண கிராமிய வங்கி வைப்பாளர்களின் பாதுகாப்பு சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அவர்களது கோரிக்கைகளை செவி மடுத்தார்.
கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டிடத்தினை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தருவதனை அறிந்து, அம்மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஏற்பாடுசெய்து தமது கோரிக்கைகளை ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்தனர்.