பிக்குகளின் மோசமான நடத்தையினால் அனைத்து பிக்குகளும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றனர் : ஜனாதிபதி
28 Mar,2019
அதிகமான இளம் பிக்குகள் நாட்டில் பௌத்த சமூக சூழலொன்றையும் சிறந்த சமூகமொன்றையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அதேநேரம், சிறியதொரு பிரிவினரின் நடவடிக்கைகளின் காரணமாக சில சந்தர்ப்பங்களில் முழு மகாசங்கத்தினரும் விமர்சனத்திற்கு உள்ளாவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
சில பிக்குகளின் மோசமான நடத்தைகள் இணையத்தளங்களினூடாக வெளியிடப்படுவதன் காரணமாக இலங்கை பிக்குகள் சமூகம் குறித்து பிழையான மனப்பதிவொன்று உலகில் ஏற்படக்கூடும் என்றும் இந்த நிலைமை பற்றி இளம் பிக்குகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று (26) பிற்பகல் மஹர, நாரங்வல ஸ்ரீ சுமணகீர்த்தி பிரிவெனாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தையும் புதிய மாநாட்டு மண்டபத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விகாராதிபதி சங்கைக்குரிய ஊறுவெல வினீத நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் நேற்று பிற்பகல் விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி முதலில் சமய கிரியைகளில் ஈடுட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய அன்னதான மண்டபத்தை மகாசங்கத்தினரிடம் ஜனாதிபதி கையளித்தார்.
இலங்கை ராமஞ்ஞ மகாநிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபாண பேமசிறி நாயக்க தேரர், பேலியகொட வித்தியலங்கார பிரிவெனாதிபதி சங்கைக்குரிய வெலமிடியாவே குசலதம்ம நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்