கிரவல் அகழும் போர்வையில் முல்லைத்தீவில் காடழிப்பு!- வீடியோ
25 Mar,2019
முல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது.
இதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறித்த இடத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக கிரவல் அகழப்படுவதை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு நிதி செலுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டே கிரவல் அகழப்படுகின்றது.
எனினும், A9 வீதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டு கிரவல்
அகழப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
பல்வேறு தேவைகளுக்காக வௌிமாவட்டங்களுக்கு இங்கிருந்து கிரவல் ஏற்றிச்செல்லப்படுகின்றது.
இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் பிரேமானந்திடம் வினவியபோது, ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பேசியுள்ளதாகவும் தமக்கு முழுமையான காணி அதிகாரம் இல்லை எனவும் இதனைத் தீர்க்க ஒரு குழுவை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பதிலளித்தார்