இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்
21 Mar,2019
பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
வாகன விபத்தொன்றினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
பாணந்துறை – திக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து, சிங்களவர் ஒருவருக்கும், முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கும் இடையிலேயே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, மோதல் சம்பவம் வலுப்பெற்றதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சம்பவ இடத்திற்கு போலீஸ் விசேட அதிரடிபடையினர் வரவழைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்தும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பாணந்துறை வடக்கு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி திகண பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் வலு பெற்றிருந்ததுடன், அதில் பெரும்பாலான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிந்தது.
இவ்வாறு மற்றுமொரு சம்பவம் இடம்பெறுவதனை தவிர்க்கும் வகையில் போலீஸார் விரைந்து செயற்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.