67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு ஐ.நா அறிவுறுத்தல்?
19 Mar,2019
யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளடங்கிய 67 இராணுவ உயரதிகாரிகளை கைதுசெய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் அறிவுறுத்தியுள்ளார் என சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.
17 நாடுகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ள அவர், இவர்கள் குறித்த நாடுகளுக்கு வந்தால் அவர்களைக் கைதுசெய்து வழக்குத் தொடருமாறும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், ஐ.நா. ஆணையாளரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ரஸ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடன்படவில்லையென சிங்கள வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.
யுத்தக்குற்றத்திற்குள்ளான இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளை சர்வதேச நீதமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அந்த அறிவித்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.