காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பத்திற்கு அரசாங்கத்தால் 6000 ரூபா கண்துணைப்பு!
07 Mar,2019
அரச படைகளால் விசாரணை என அழைத்துச் செல்லப்பட்டும் பிடித்துச் செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பத்திற்கு அரசாங்கம் மாதாந்தம் வெறும் 6000 ரூபா பணத்தை உதவு தொகையாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் உட்பட்ட சந்தர்ப்பங்களில் அரச படைகளால் விசாரணை எனக் கூறிப் பிடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
குடும்பத்தில் தொழில் செய்து குடும்ப வருமானத்தை ஈட்டும் குடும்பத் தலைவர்களை அரச படைகள் பிடித்துச் சென்று காணாமல் ஆக்கியுள்ளமையால் அக்குடும்பங்கள் வாழ்வதற்கு வழியற்ற நிலையில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றன.
தமது குடும்பத் தலைவர்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர்களை பிடித்துச் சென்ற அரச படைகளிடமிருந்து, அவர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களுக்கு 6000 ரூபா பணம் வழங்கப் போவதாகக் குறிப்பிட்டு அரசாங்கத்தின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
உழைத்துக் குடும்பச் செலவுகள் அனைத்தையும் கவனிக்கவேண்டிய குடும்பத் தலைவரை விசாரணை என்று கூறி பிடித்துச் சென்று காணாமல் ஆக்கிவிட்டு அக்குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ள 6000 ரூபா கண்துடைப்பு உதவி இக்காலப் பகுதியில் எந்தளவுக்குப் போதுமானதாக அமையும்? உண்மையிலேயே இக்குடும்பங்களின் அவல நிலை அறிந்து அரசாங்கம், அவர்களுக்கு உதவ முன்வந்திருக்குமாகவிருந்தால் இக்குடும்பங்களுக்கு 30,000 ரூபாவுக்குக் குறையாத தொகையை மாதாந்தம் வழங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத் தலைவரது உழைப்பு அவரது வருமானம் என்பவற்றினைக் கருத்திற்கொண்டே அக்குடும்பம் வாழ்வதற்கேற்ற உதவியை அரசாங்கம் செய்ய முன்வந்திருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களுக்கு அரசாங்கம் மாதாந்த உதவுதொகை வழங்குகின்றது என்பதைக் காட்டுவதற்காக 2019 ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மாதாந்த உதவு தொகையாக 6000 ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச படைகளால் பிடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் வருவான், வருவான் எனக் கலங்கிக் காத்திருந்து துன்பங்களை எதிர்நோக்கி வந்த தாய்மார் பலர் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகி பெரிதும் அவலப்படுகின்றார்கள். இதில் சிலர் இறந்துள்ளார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் பலவற்றில் தந்தையாரின் உழைப்பின்றிப் பாடசாலை செல்லும் பல சிறுவர்கள் அவலங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
அரச படைகளால் பிடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களுக்கு அரசு மாதாந்த உதவி புரிவதாகக் காட்டுவதற்காக உதவு தொகை வழங்குவதை விட, அரச படைகளால் பிடித்துச் செல்லப்பட்டு இரகசிய வதை முகாம்களில் மறைத்து வைத்துள்ள அவர்களது உறவுகளை அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விடுதலை செய்து உதவுவதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாக அமையும்.