வடக்கு மாகாணத்திற்கு புதிதாக 850 தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
01 Mar,2019
வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார்கள் இணைக்கப்படவுள்ளனர். 18 தொடக்கம் 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள் முன்வரவேண்டும்.
இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் உள்ளனர்.
இதனால் மேலதிக பொலிஸார் எமக்கு தேவையாக உள்ளார்கள். நாளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை நான் சந்திக்க உள்ளேன். அவரிடம் இவ்விடயம் தொடர்பில் பேச உள்ளோம் என்றார்.