இலங்கை குறித்து ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு.!
20 Feb,2019
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த அறிக்கையை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் திகதி குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென்றும், எனினும் மார்ச் 8 பிற்பகல் இந்த அறிக்கை வெளியிடப்பட சாத்தியம் உண்டு என்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. ஆணையகத்தை மேற்கோள்காட்டி த சண்டே மோர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கான தெளிவுபடுத்தல் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ளும் வகையில் அதன் பிரதி அனுப்பிவைக்கப்படவுள்ளது.
அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அதன் பிரதிகள் அனுப்பிவைக்கப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. பிரதிநிதி, கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் இணை அனுசரணையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தாத நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை கோரியது.
ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென வாக்குறுதி வழங்கப்பட்டது. அதற்கிடையில் தேசிய அரசாங்கம் கலைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக தீர்வு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாறான பின்னணியில் ஐ.நா.வின் முக்கிய அறிக்கை வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.