சிலாபம் பகுதியில் நிகழ்ந்த விபத்து : நால்வர் பலி
19 Feb,2019
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று சிலாபம் பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் நால்வர் பலியானதுடன் பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிலாபம் மஹவெவ பகுதியில் குறித்த பஸ் வண்டி அதிகாலை 4:30 அளவில் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த மின் நிலைமாற்றியுடன் மோதியுள்ளது.
அதிவேகத்தில் பஸ் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் திடீரென்று ஏற்பட்டதாகவும், ஓட்டுநரால் உடனடியாக பஸ்ஸை கட்டுப்படுத்தமுடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நான்கு பேர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் நிலை கவலைக்கிடமானதாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.