மரண தண்டனையை அமுலாக்கக் கூடாது ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு; பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்றுமாறும் கோரிக்கை
17 Feb,2019
இலங்கையில் மரண தண்டனை மீள் அமுலாக்க நடவடிக் கைக்கு முழுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மரண தண்டனை அமுலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதை நீடிக்கவேண்டும் என்றும் அதனை முழுமையாக ஒழிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அவசியம் என்பதனையும் அதற்கு பதிலாக வரும் புதிய சட்டமூலம் சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 22 ஆவது அமர்வு நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்றது.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்க இந்த அமர்வில் கலந்துகொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் அதன் வெ ளிநாட்டு சேவையின் ஆசிய பசுபிக் பிரவின் முகாமைத்துவ பணிப்பாளர் போலா பம்பலோனி கூட்டத்துக்கு இணைத்தலைமை வகித்தார்.
இது தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 22 ஆவது அமர்வு மிகவும் பயன்தக்க வகையில் அமைந்தது. இரண்டு தரப்பினருக்கும் இடையிலான அபிவிருத்திகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையில் 2018 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டமை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன் இலங்கையின் நல்லாட்சி மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு ஆகியவற்றுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இதன்போது ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் மனித உரிமை நல்லிணக்கம் போன்றவற்றில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையினால் இலங்கை பாரிய நன்மையை அடைவதாக எடுத்துக்கூறப்பட்டது. ஆனால் இதனைக் கொண்டு மேலும் நன்மை அடைந்திருக்கலாம் என்று இரண்டு தரப்புக்களும் இதன்போது ஏற்றுக்கொண்டன.
27 சர்வதேச சாசனங்களை அமுல்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை இதன்போது இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அவசியம் என்பதனையும் அதற்கு பதிலாக வரும் புதிய சட்டமூலம் சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.
மேலும் மரண தண்டனை அமுலாக்கத்துக்கு இதன்போது தனது எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் வெ ளியிட்டதுடன் இலங்கை மரண தண்டனை அமுலாக்கத்தை நிறுததி வைத்துள்ளதை நீடிக்கவேண்டும் என்றும் அதனை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் இழப்பீடு வழங்கும் அலுவலகம் என்பன நிறுவப்பட்டுள்ளமையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. ஆனால் நல்லிணக்கத்தில் மேலும் முன்னேற்றம் வெ ளிக்காட்டப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதுடன் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டது.
இதேவேளை மேலும் பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகள் தொடர்பாகவும் இரண்டு தரப்பினரும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்தக் கூட்டம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் கொழுமு்பில் நடைபெறவுள்ளது