மகிந்த ராஜபக்ஷ தரப்பு விமர்சனத்துக்கு ரணில் விக்ரமசிங்க பதிலடி
15 Feb,2019
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகிறது. அதனையே மகிந்த தரப்பினர் விமர்சித்து வருகின்றார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்திற்கான மூன்று நாள் பயணம் மேற்கொண்டு நேற்று யாழ் வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் உயர் மட்டக் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஐித சேனாரத்ன, அகில விராஜ்காரியவசம், வஐிர அபேயவர்தன, சாலக ரத்நாயக்க, அர்ஜுன ரணதுங்க, ரிசாட் பதியுதீன், விஐயகலா மகேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், ஈ. சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மகிந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அதனையே மகிந்த தரப்பினர் தற்போது விமர்சித்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம். நாம் என்னும் அரசியல் வரவை தயாரிக்கவில்லை. அது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
நாட்டில் அதிகார பகிர்வை செய்ய முற்படும் போது நாட்டை பிரிப்பதாக கூறுகின்றார்கள். அதிகார பகிர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி எந்த ஆவணத்தையும் எங்கும் முன்வைக்கவில்லை. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் சர்வகட்சி குழு முன்வைத்த யோசனை தொடர்பாகவே தற்போது பேசிக்கொண்டிருக்கின்றோம். அது தொடர்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பும் எங்களுடன் பேசுகின்றது.
இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு: பின்னணி என்ன?
தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த இலங்கை தமிழ் மக்களின் கதை
அவ்வாறு அன்று அந்த யோசனை கொடுத்தவர்கள் தற்போது நாடு பிளவுபடப்போவதாக கூறுகின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் யோசனை குறித்து யாரும் பேசவில்லை. அந்த சர்வகட்சி கூட்டத்துக்கு நாங்கள் செல்லவில்லை. ஆனால், மகிந்த அதனை நடத்தும் போது நல்லது என்றார்கள் நாம் இப்போது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது துரோகம் என்கிறார்கள். நாம் நாட்டை பிரிக்கவில்லை மகிந்தவே நாட்டை பிரிக்க முற்பட்டுள்ளார்.
அவர்களது அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டது. தமது அரசியல் வங்குரோத்தை மறைக்கவே நாட்டை பிரிப்பதாக கூறுகின்றார்கள்.
அவர்கள் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியை நாங்கள் தீர்த்துவருகின்றோம். ஜனநாயகத்தை பாதுகாத்தோம். சுகந்திரத்தை ஏற்படுத்தினோம். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவோம். அதற்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவது அவசியம்.
வடக்கு மக்களுக்கும் ஏனைய மக்களை போல் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இதற்காகவே பல அமைச்சர்களுடன் இங்கு வந்துள்ளேன். அவர்களது பிரச்சனையை அவசரமாக தீர்த்து வைப்போம். அது தொடர்பில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்றார்.