பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சிராந்தி
13 Feb,2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவை வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக ராஜபக்சவின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம் என குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் கருத்து தொடர்பில் தூதரக அதிகாரிகள் பலர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என நாமல் ராஜபக்சவிடம் வினவியுள்ளனர்.
இதன் போது தனது தாயார் ஷிரந்தி ராஜபக்சவுக்கே ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் பசில் ராஜபக்சவுக்கு அவசியமான நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் மாலை 7 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரவு 10 மணிவரை பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பசில் ராஜபக்ச மன வருத்தத்தில் கலந்துரையாடல்களை புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது