ஐந்து பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகின்றது இலங்கை?
06 Feb,2019
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்த இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஐந்து பேர் குறித்த சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் கடந்த மாதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டிருந்த நீதி அமைச்சர் தலதா அத்துகோரல,
“போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியபோதும் அதுதொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை
ஒக்டோபர் 12ம் திகதி முதல் ஜனவரி இறுதி வரையில் 5 பேரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அது குறித்த ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியபோதும் அதுதொடர்பில் பதில் எதுவும் வரவில்லை.” என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை பேச்சாளர் துஷார உபுல்தெனிய சர்வதேச ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கடந்த ஆண்டு விளம்பரம் செய்யப்பட்ட போதிலும், பொருத்தமான ஒருவர் முன்வரவில்லை எனவும், தொழில்நுட்ப ரீதியில் அலுகோசு ஊழியர்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தேவையேற்பட்டால் விரைவாக ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்க முடியும் என” அவர் மேலும் கூறியுள்ளார்.