இறுதிப் போர்க் குற்ற இராணுவத்தினருக்கு தண்டனை! மஹிந்த அதிரடி!
06 Feb,2019
யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரால் பாரதூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக ஏற்றுக்கொண்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்காவின் அரச தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ச, அவர்களை நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.
பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எவரும் பாதிக்கப்படவில்லை எனத் தொடர்ச்சியாக கூறிவரும் மஹிந்த ராஜபக்ச தான் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையையே முன்னெடுத்ததாக கூறிவந்தார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் போரின் போது பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பதாக சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவரான முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச முதன்முறையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
சிறிலங்காவின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் அவரது பிரத்தியேக இல்லத்தில் கொழும்பிலுள்ள தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கேள்விகளையும் தொடுக்க மஹிந்த ராஜபக்ச அனுமதித்திருந்த நிலையில், அங்கு வந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர், பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய படையினர் கைதுசெய்யப்படும் போது அதற்கு எதிராக பிரசாரம் செய்து சட்டம் நிலைநாட்டப்படுவதை தடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே என்று வினவினார்.
அதற்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, புலனாய்வு அதிகாரிகள் பணிசெய்யும்போது பல பொறுப்புக்கள் இருக்கின்றன. சாட்சிகள் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யமுடியாதுதானே. ஒருபோர் இடம்பெற்றது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் எதிரானதும் அல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இடம்பெற்றது. யுத்த காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.
ஆகவே மன்னிப்பு வழங்கும்போது இரண்டு தரப்பினருக்குமே மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு சாராருக்கு மட்டும் மன்னிப்பு வழங்கிவிட்டு மற்றைய தரப்பினருக்கு தண்டனை வழங்குவது நீதியல்ல. மாறாக பாலியல் குற்றங்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் என்பன இடம்பெற்றிருந்தால் நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அந்த முறைப்படியல்ல இங்கு இடம்பெற்றிருப்பது. பலரும் பலவிதமாக கூறலாம். ஆனாலும் அரசாங்கம் ஓர் இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும். கடுமையான குற்றங்கள் இருந்தால் அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வீட்டில் பெண் பிள்ளை இருந்தால் அவரை கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் இது போரில் தொடர்புபடாது.
ஆனால் அது இடம்பெற்றது. இருதரப்பிலும் இடம்பெற்றபடியினால் இரு சாராருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு தரப்பினரை தண்டித்து, மறுதரப்பினரை விடுவிக்கவும் முடியாது உத்தேச அரசியல் யாப்பிலும் சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறைமையும், பௌத்த மதத்திற்கான முன்னுரிமையும் தொடர்ந்தும் பேணப்படுவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றீர்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவிடம் வினவிய போது, தற்போதைய அரசாங்கத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ச,
அவசரமாக அரசியலமைப்பொன்றை உருவாக்க முடியாது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கொல்வின் ஆர்.டி சில்வாகூட இரண்டு வருடங்களைக் கழித்தார். ஜே.ஆர். ஜயவர்தனவும் சில காலத்தை அரசியலமைப்பு உருவாக்கலுக்காக எடுத்தார். பேச்சு நடத்தினார்.
அவர் மிகவும் கூர்மை சிந்தனை கொண்டவர் என்பதோடு சட்ட நிபுணர்களையும் கொண்டிருந்தார். இவ்வாறு பேச்சு நடத்தி அரசியலமைப்பை உருவாக்கினார்கள். தற்போது சம்பந்தன், சுமந்திரன், ஜயம்பத்தி விக்ரமரட்ண ஆகியோரை இணைத்து அவசர அவசரமாக உருவாக்க எத்தனிக்கிறார்கள். 19ஆவது திருத்தமும் அவ்வாறே. எம்மீது தாக்குதல் நடத்துவதற்கே தேர்தலுக்கு முன்னதாக அதனை நிறைவேற்றினார்கள்.
அதனால் பிழைகள் ஏற்படத்தான் செய்யும். எனது காலத்தில் ஜி.எல்.பீரிஸ்கூட அவசரத்தில் செய்திருந்தாலும் சரியாக செய்திருந்தார். தமிழ் மக்களின் வாக்கு வங்கிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தேச அரசியல் சாசனமொன்று முன்வைக்கப்படப் போவதாக இல்லாத ஒன்றை பிரசாரப்படுத்தி வருவதாகவும் சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த குற்றம்சாட்டினார்.
சிறிலங்காவின் சுதந்திரத் தினத்திற்கு முன்னதாக உத்தேச அரசியல் சாசன வரைபு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறிவந்தார். எனினும் அவ்வாறான வரைபொன்று கொண்டுவரப்பட்டதா என்றும் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.
மஹிந்த ராஜபக்ச புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. இந்த அரசாங்கம் சிறுபான்மை அரசாங்கமாகும். 104 உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை.
சுதந்திர தினத்திற்கு முன்னதாக புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதாக சுமந்திரன் கூறிவந்தார். ஆனால் கொண்டுவரப்பட்டதா இல்லையே. நான் அதனை செய்வதாக கூறி அவர்களது ஆதரவை கேட்டபோது மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார்கள். ரணிலிடம் நிறைய கிடைக்கும் என்று கருதி அவருக்கு ஆதரவு வழங்கினார்கள். நான்கு வருடங்கள் சென்றுவிட்டன. இதுவரை எதுவும் நடக்கவில்லை. இறுதியில் கிடைத்ததா. இல்லையே. எனவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.