பாதாள உலக குழுத் தலைவர் அதிரடியாக கைது! பிரபல பாடகரும் உள்ளடக்கம்!
05 Feb,2019
இலங்கை பொலிஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என கூறப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துர மதுஷ் என்பவர் டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் உட்பட 25 சந்தேகிகளை டுபாய் பொலிஸாரும் சிறிலங்காப் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளதாக டுபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கைதுசெய்யப்பட்டவர்களுள் இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி நாட்டில் தலைமறைவான மாகந்துர மதுஷ் இலங்கையில் மிகவும் பயங்கரமான பாதாள உலகக் குழுவின் தலைவராக அறியப்படுகிறார்.
புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ஈ.எஸ் தர்மபிரியவை படுகொலை செய்தால் ஐம்பது லட்சம் ரூபா தருவதாக அவரின் சாரதியிடம் கப்பம் கோரியதுடன் அவ்வாறில்லையெனில் சாரதியின் சகோதரரைக் கொலைசெய்யப்போவதாகவும் மிரட்டியிருந்தார்.
மேலும் இலங்கையில் ஆட்கடத்தல்கள், கப்பம்கோரல்கள் மற்றும் படுகொலைகள் என்பவற்றுடன் மதுஷின் பாதாள உலகக் குழுவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தகவல் கூறியிருந்தன.
இலங்கையிலிருந்து டுபாய்க்குத் தப்பிச் சென்றிருந்த மாகந்துர மதுஷ் இரு நாட்டுப் பொலிஸாராலும் தேடப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையிலேயே இலங்கை-டுபாய் கூட்டு நடவடிக்கையில் மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 25பேரும் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இன்று கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துர மதுஷ் உள்ளிட்ட அவரது சகாக்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
டுபாயில் அஞ்ஞாதவாசம் அனுபவித்துவந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட பயங்கர பாதாளக் கும்பல், டுபாய் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் பொலிஸாரினது கூட்டு நடவடிக்கைமூலம் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்கள்.
நீண்ட காலமாக இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த மதுஷ் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையைவிட்டு தப்பிச் சென்று டுபாயில் மறைந்திருந்தனர்.
இதன்போதும் இலங்கையில் மதுஷ் குழுவினர் பல்வேறு கடத்தல்கள் மற்றும் கப்பங்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இவர்கள் டுபாயில் விசேட நடவடிக்கைமூலம் ஹோட்டல் ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான தீவிர ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில் குறித்த கும்பலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கும்பலை உடனடியாக இலங்கைக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.