சிறிசேன மரணம் தொடர்பாக கணிப்பு கூறிய ஜோதிடர் விடுதலை
01 Feb,2019
"இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் மரணிப்பார்" என கணிப்பு கூறிய ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்படி வழக்கை சட்டமா அதிபர் மீளப்பெற்றமையினால், ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்த ஜோதிடர் இலங்கை கடற்படையில் கடமையாற்றியவர் என்பதும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்திய கடற்படைச் சிப்பாய் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய பிரதமரை தாக்கிய குற்றத்துக்காக இவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதும், இரண்டரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ வழங்கிய பொதுமன்னிப்பின் கீழ் இவர் விடுதலையானார்.
இதன் பின்னர், இவர் ஒரு ஜோதிடராகப் பிரபல்யமானதோடு, அரசியலிலும் அரசியல் பிரமுகர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் நடக்கும் என உறுதியிட்டு, பல்வேறு முன் அறிவிப்புக்களை கூறி வந்தார்.
இவ்வாறான பின்னணியில்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் மரணிப்பார் என்று, விஜித ரோஹன விஜேமுனி, எதிர்வு கூறல் ஒன்றினை வெளியிட்டார்.
அவர் பேசி பகிரங்கமாக பதிவேற்றிய வீடியோ ஒன்றில், இந்த எதிர்வு கூறலை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து பொய்யான தகவலை பொதுமக்கள் மத்தியில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில், 2017ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி, அவரை குற்றப் புனாய்வுப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். ஆயினும், அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
இந்த நிலையில், குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது, ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனியை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.
ஜோதிடருக்கு எதிரான வழக்கை, சட்டமா அதிபர் திரும்பப் பெற்றுக் கொண்டமையினாலேயே, அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.