இந்திய அரசாங்கத்தின் உதவியில் இலங்கையில் புதிய பள்ளிக்கட்டடங்கள்
29 Jan,2019
இந்திய அரசாங்கத்தின் உதவியில் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான புதிய பள்ளிக்கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாவற்குழி மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய பாடசாலை கட்டடங்கள் இன்று இலங்கை மக்களிடம் கையளிக்கப்பட்டன.
நாவற்குழி மகாவித்தியாலயத்திலும் டிறிபேர்க் கல்லூரியிலும் இந்திய அரசின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளி கட்டடங்கள் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஷில்பக் அம்புலே மற்றும் வட மாகாண ஆளுநர் முனைவர் சுரேன் ராகவன் அவர்களாலும் இன்று திங்கள் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தற்போது வடக்கு மாகாணத்தில் 27 பாடசாலைகளில் 250 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுவரும் புதிய வகுப்பறை கட்டிடங்களின் ஒரு பகுதியாக இந்த கட்டடங்கள் அமைந்துள்ளன.
இன்று கையளிக்கப்பட்ட இரண்டு பள்ளிக் கட்டடங்களுடன் மொத்தமாக பத்துப் பள்ளி கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பாடசாலைகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஏனைய பாடசாலைகளுக்கான கட்டட வேலைகள் முடிவுறுத்தப்பட்டு வரவிருக்கும் நாட்களில் பாடசாலைகளிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன் நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஷில்பக் அம்புலே, வாய்ப்புகளை கைப்பற்றி அவற்றை சாதனைகளாக மாற்ற இளைஞர்களை வலியுறுத்தினார். தேசத்தை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் மிக முக்கிய பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பிராந்தியத்தில் இந்திய அரசு மேற்கொண்ட மக்கள் அபிவிருத்தி சார்ந்த ஒத்துழைப்பு திட்டங்களைப்பற்றிய விபரங்களையும் முன்வைத்தார்.
புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்றத்திற்காக இந்த மாகாணத்தில் மொத்தம் 46,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1990 இலக்க அவசரகால நோயாளர் ஊர்திச்சேவைகள் வட மாகாணம் உள்ளிட்ட எட்டு மாகாணங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளன.
வட மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களாவன யாழ்ப்பாணக் கலாசார மையக் கட்டடம், 3000 மழைநீர் சேகரிப்பு அலகுகளை நிர்மாணித்தல், 600மாதிரி வீடுகள் கொண்ட 25 மாதிரி கிராமங்களை நிர்மாணித்தல் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள தொழில் முனைவோருக்கான வர்த்தக தகவல் தொடர்பாடல் மையம் என்பனவாகும்.
சுமார் 12 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மைய கட்டுமானப்பணிகள் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முடிவடையும் எனவும் இம் மையமானது உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் என தெரிவித்தார்.