நாட்டில் புதிதாக அரபுக்கல்லூரிகள் நிறுவப்படுவதைத் தடைசெய்வதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தையும் வக்பு சபையின் கீழ்ப் பதிவு செய்து அவற்றைக் கண்காணிப்பதற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.
நாட்டிலுள்ள அரபுக்கல்லூரிகள் தொடர்பில் அமைச்சர் ஹலீம் கருத்து தெரிவிக்கையில்;
நாட்டில் சுமார் 300 அரபுக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டில்லை. திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அரபுக்கல்லூரிகளும் ஒழுங்காக கண்காணிக்கப்படுவதில்லை. அவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத பல அரபுக்கல்லூரிகள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளைப் பெற்று வருகின்றன. அந்நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்றும் அறிய முடியாதுள்ளது. அதனால் புதிதாக அரபுக்கல்லூரிகள் ஸ்தாபிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, தற்போதுள்ள அரபுக்கல்லூரிகள் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில் அரபுக்கல்லூரிகள் சிலவற்றின் மீது ஏனைய சமூகம் சந்தேகம் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள், தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள், இஸ்லாம் நல்லிணக்கத்தையும், நல்லுறவையுமே வலியுறுத்துகிறது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.
அரபுக்கல்லூரிகளை வக்பு சபையின் கீழ் பதிவு செய்வதன் மூலம் அவற்றை கண்காணித்து அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.எம்.ஜவுபர் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியத்தில் 217 அரபுக்கல்லூரிகள் பதிவு செய்து கொண்டுள்ளன. மேலும் 10 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன.
அமைச்சர் ஹலீம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். தற்போது இயங்கிவரும் அரபுக்கல்லூரிகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்து உதவி செய்ய வேண்டும் என்றார்.
வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசின் கருத்து தெரிவிக்கையில்; வக்பு சபையில் அரபு கல்லூரிகளை பதிவு செய்ய அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வக்பு சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.