பிரிகேடியரிற்கு எதிரான பிடியாணை- மறுபரிசீலனை செய்யுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை
26 Jan,2019
பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரிட்டனை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி மரணஅச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் இராணுவ அதிகாரி பிரியங்க பெர்ணான்டோவிற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறே வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
இந்த சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு உட்பட பிரிகேடியர் குறித்து பின்பற்றப்பட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரிகேடியரிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பிடியாணை மற்றும் பிணையில்லாத பிடியாணை குறித்து சுட்டிக்காட்டியுள்ள ரவிநாத் ஆரியசிங்க இது சர்வதேச சட்டங்களிற்கு முரணானது என தெரிவித்துள்ளார்
பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இராஜதந்திர முகவராக செயற்பட்டுவந்தவர் என்பதால் அவரிற்கு விடுபாட்டுமை உள்ளது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சின் செயலார் வலியுறுத்தியுள்ளார்.