தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
23 Jan,2019
இலங்கையின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர்.
போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான பேரை ராணுவம் கொன்று குவித்ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. மன்னார் நகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இருந்தனர். இந்த நகரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரின்போது இங்கு இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் நகரில் கடந்த ஆண்டு கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் வெட்டியபோது அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் கண்டெடுக்கப்பட்டன.
ராணுவம் நடத்திய வேட்டையில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக்கூடுகள் இவை என்ற புகார் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் அங்குள்ள எலும்புக்கூடுகளை மீட்கும் பணியில் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தலைமையிலான குழவினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசின் உத்தரவின் பேரில் இந்தக் குழு அங்கு பணியாற்றி வருகிறது. இதுவரை அங்கு 300 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் அடுக்கி வைத்தது போல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது இலங்கை அரசுக்கு கடும் சிக்கலை ஏற்பட்டுள்ளது. போரின்போது வடக்கு மாகாணப் பகுதி மக்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 12 வயதுக்குட்ட 23 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும். ராஜபக்ச தலைமையிலான குழுவில் மருத்துவ நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் இடம்பெற்றுள்ளனர். தோண்டியெடுக்கும் பணிகளைப் பார்வையிட பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சமிந்த ராஜபக்ச கூறும்போது, “ஏராளமான எலும்புக்கூடுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 125 நாட்களுக்கும் மேலாக இங்கு அகழாய்வுப் பணி செய்துள்ளோம். இந்த சம்பவத்தை நாங்கள் ஒரு குற்ற சம்பவமாகவே பார்க்கிறோம். ஒருவேளை இது மயானமாக இருந்தால், புதைக்கப்படும் சடலங்கள் கிடைமட்டமாக இருக்கும். ஆனால் இங்கு உடல்களைக் கொன்று குவித்து அப்படியே பள்ளத்தில் தள்ளிவிட்டது போல் உள்ளது.
கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவின் மியாமியிலுள்ள ஆய்வகத்துக்கும் சில எலும்புக்கூடுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு வரும் வரை வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது” என்றார்.
மியாமியிலுள்ள ஆய்வகத்திலிருந்து அடுத்த வாரம் சோதனை முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கிறோம். இங்கிருந்து அனுப்பப்பட்ட எலும்புக்கூடுகள், பற்கள் மீது கார்பன்-14 என்ற சோதனையை அந்த ஆய்வக அதிகாரிகள் நடத்துவார்கள். இதன்மூலம் அந்த எலும்பு, பற்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரிந்துவிடும்.
இதன்மூலம் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுதள் சமீப காலத்தைச் சேர்ந்தவையா அல்லது நூற்றாண்டுகளுக்கு முந்தையதா எநப்தை தெரிந்துவிடும்” என்றார்.
ஆனால் மன்னார் பகுதியில் இலங்கை ராணுவம் யாரையும் கொன்று புதைக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது