மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன
02 Jan,2019
மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன் கிழமை 122 ஆவது நாளாக அகழ்வு பணிகள் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படவில்லை எனவும் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்திருந்ததாகவும் தெரிவித்த அவர் அவற்றை சீர் செய்து அகழ்வு இடம் பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேலி அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் இன்றைய தினம் மன்னார் நீதவானுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது எனவும் குறிப்பாக அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது எனவும் தெரிவித்துள்ள அவா மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் போது மரணம் தொடர்பிலும் ஏனைய விடையங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடியும்.மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.
தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.