புலிகளை அழித்த எமக்கு ரணிலை அனுப்புவது பெரிய விடயமல்ல! மகிந்த
02 Jan,2019
விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ரணிலை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவது சவாலான விடயம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“நாங்கள் தோல்வியடையவில்லை. அதேபோல் புறமுதுகு காட்டி ஓடவும் இல்லை. ஆனால் எங்களை பார்த்து அரசியல் சூழ்ச்சிகாரர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் அரசியல் சூழ்ச்சி எதனையும் செய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரே நீதிமன்றங்களை பயன்படுத்தி அரசியல் சூழ்ச்சியைத் செய்து எம்மை வெளியேற்றினார்கள்.
நாங்கள் நீதிமன்றில் தீர்ப்பிற்கு தலைவணங்குகின்றோம். நாட்டு மக்களின் நலன் கருதியே பிரதமர் பதவியை இராஜினாமா செய்தேன். நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் கிடையாது.
அதனை நான் நிரூபித்து காட்டியுள்ளேன். நாடாளுமன்ற தேர்தலை இப்போது நடத்தினால் நாங்களே நிச்சயம் வெற்றிபெறுவோம். இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலுக்கு அச்சமடைகின்றனர்.
விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த எமக்கு ஊழல், மோசடிகளை மறைத்து ஆட்சி நடத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவது கடினமான வேலை அல்ல.” என அவர் கூறியுள்ளார்.