வடக்கு கிழக்கில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் பெருக்கெடுத்து
17 Dec,2018
யாழ்ப்பாணம் உடபட வடக்கில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசியதுடன் குளிரான காலநிலை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் நேற்றுக்காலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது. இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன கடல் அலையினால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் முல்லைத்தீவு கள்ளப்பாடு, தீர்த்தக்கரை வரையான கடற்கரையோர வீதிகளில் கடல்நீர் மக்களின் வாழிடங்களுக்குள் உட்புகுந்துள்ளது. குறித்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் கிராம அலுவலகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
மன்னாரில் சில கிராமங்களில் நேற்றுக் காலையிலிருந்து கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புக ஆரம்பித்தது. சாந்திபுரம்,சௌத்பார்,எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு,மேற்கு ஆகிய கிராமங்களுக்குள், கடல் நீர் படிப்படியாக உட்புக ஆரம்பித்துள்ளதால், வீடுகளும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. மன்னார் புதையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே கடல் நீர் கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது.பாதிக்கப்பட்ட கிராமங்களை கிராம அலுவலகர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் திடீரென கடல் நீர் உட்புகுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுனாமி அலைகள் போன்று கடல் அலைகள் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி வரப்போகிறது என்ற பீதியில் மக்கள் பதறியடித்து ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணலை நகரப்பகுதியிலும், முதூர் பிரதேசத்திலும் கடல் நீர் பெருக்கெடுத்ததுடன், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.வடக்கு கிழக்கில் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், கடல்நீர் பெருக்கெடுத்து மன்னார், முல்லைத்தீவு, திருகோணமரல, மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதனால் மக்கள் பீதியடைந்ததுடன், வீடுகளை விட்டும் வெளியேறினார்