மைத்திரி முன்பாக பதவியேற்பதா? வெட்கமாக இருக்கின்றது பொன்சேகா
16 Dec,2018
எந்த அமைச்சையும் ஏற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஆனால், ஜனாதிபதி மைத்திரியின் முன் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளமையை நினைத்து வெட்கப்படுகின்றேன் என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ‘பீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையில் சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிடமும் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மைத்திரியே பிரதான காரணம் என்று அனைவரும் தெரிந்த விடயம். அவர் செய்த நடவடிக்கைகளை நாம் மறக்கவே மாட்டோம்.
நாட்டின் நற்பெயரை அவர் கெடுத்துவிட்டார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் திறம்படச் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா உரையாற்றும்போது, மைத்திரிபால சிறிசேனவை ‘பைத்தியக்காரன்’ - ‘மனநோயாளி’ என்று விளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டு அரசின் ஆட்சிக் காலத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கு சரத் பொன்சேகாவை நியமிக்காமல் தடுத்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.