மகிந்தவை திட்டமிட்டு சதியில் சிக்கவைத்த மைத்திரி!
16 Dec,2018
அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்ச எதிர்நோக்கியுள்ள மோசமான பின்னடைவிற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், அவரது அடிவருடிகளுமே காரணம் என்று மஹிந்தவின் அரசியல் சகாவான சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம புதிய தகவலொன்றை வெளியிட்டிருக்கின்றார்.
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கு நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்தும் இருக்கும் செல்வாக்கை பொறுக்க முடியாததால் ஜனாதிபதி மைத்ரிபால தனக்கு விசுவாசமான சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரை மஹிந்த தரப்பிற்கு அனுப்பிவைத்து இந்த சதியை அரங்கேற்றியிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும் சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியென அழைத்துக்கொண்ட அனைவரும் இந்த சதிக்கு துணை போகவில்லை என்று தெரிவிக்கும் குமார வெல்கம, அதிலுள்ள ஒரு சிலரும், மஹிந்த அணியில் இருந்த மைத்திரியின் விசுவாசிகள் ஒருசிலருமே கூட்டுச் சேர்ந்த மஹிந்தவிற்கு பிரதமர் பதவியை வழங்கி, அரசியல் ரீதியாக நெருக்கடிக்குள் தள்ளிவிட்டதாகவும் குமார வெல்க தெரிவித்திருக்கின்றார்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பை மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டது முதல், அந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று மஹிந்தவிற்கும், பகிரங்கமாகவும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்து வந்தார்.
இதனால் அவருக்கும் மஹிந்த எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று கூறிவந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சில மஹிந்தவாதிகளுக்கும் இடையில் பகிரங்கமாகவே பரபரம் வார்த்தை மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்றிலும், உச்ச நீதிமன்றிலும் தோல்வியை சந்தித்ததை அடுத்து மஹிந்த தான் ஒக்டோபர் 26 ஆம் திகதி மைத்ரி முன்னிலையில் ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச டிசெம்பர் 15 ஆம் திகதி சனிக்கிழமை அறிவித்தார்.
இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்ட கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கமார வெல்கம, தான் இதனையே ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்ததாக கூறியதுடன், காலம் கடந்தாவது மஹிந்த பலவந்தமாக கைப்பற்றி வைத்திருந்த ஆட்சியை கைவிடுவதற்கு முன்வந்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
குமார வெல்கம – “இதனையே நான் ஆரம்பம் முதல் கூறி வந்தேன். 36 வருடங்களாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்து பெற்றுக்கொண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டே நான் எனது நிலைப்பாடுகளை கூறிவந்தேன். பலாத்காரமாக ஆட்சியில் எவரும் இருக்க முடியாது. அதேவேளை நாம் தற்போது எதிர்கட்சியாக செயற்படவுள்ளோம். எதிர்கட்சியாக செயற்படும் போது எதிர்கட்சியின் பொறுப்புக்களையும் கடப்பாடுகளையும் உணர்ந்து அவற்றை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக மஹிந்தவின் உடம்பில் நுளம்புகூட அமர இடமளிக்காது கூட்டு எதிரணியாக நாம் அவரை பாதுகாத்து வந்தோம். ஆனால் வெளியிலிருந்து வந்தவர்களே மஹிந்தவை அழித்திருக்கின்றனர்”.
இதன்போது மஹிந்தவை அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவிற்குள் திட்டமிட்டு தள்ளியது யார் என்று ஊடகவியலாளர் ஒருவர் குமார வெல்கமவிடம் வினவினார்.
குமூர வெல்கம – “ உங்களுக்கே தெரியும் யார் இந்த சிக்கலில் மஹிந்தவை மாட்டிவிட்டது என்று. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒரு குழுவொன்று மஹிந்தவின் பக்கம் வந்தது. அவர்கள் வரும்போது மைத்ரியின் செய்தியொன்றுடனேயே இங்கு வந்திருந்தனர். மக்கள் மத்தியில் உச்ச இடத்தில் அதாவது எந்தவொரு தேர்தல் நடைபெற்றாலும் அந்தத் தேர்தலை தனித்து நின்று வெற்றிபெறும் வகையில் மக்களின் செல்வாக்குடன் இருந்த மஹிந்தவை கீழே இழுத்துத் தள்ளிவிட்டனர். சுதந்திரக் கட்சியில் இருந்த வந்த கூட்டமும், எமது அணிக்குள் இருந்த நான்கு ஐந்து உறுப்பினர்களும் இணைந்தே இந்த சதியை அரங்கேற்றினர். அனால் பயப்படத் தேவையில்லை. வெல்கம மஹிந்தவுடன் இறக்கும் வரை இருப்பான். வெளியிலிருந்து எவரும் மஹிந்தவை அழிப்பதற்கு சதி செய்யவில்லை. உள்ளே இருக்கும் ஒருசில நபர்களே இந்த சதியை அரங்கேற்றினர்”.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது விசுவாசிகளைக் கொண்டு மஹிந்தவை எவ்வாறு அழிக்க முனைந்தார் என்ற விபரத்தையும் குமார வெல்கம ஊடகங்களிடம் தெரிவித்தார்.
குமார வெல்கம –“இந்த நிலை ஏற்படும் என்பதை நான் ஆரம்பத்திலேயே மஹிந்தவிற்கு எச்சரித்தேன். மஹிந்தவிற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் கேட்கும் வகையில் நான் மஹிந்தவை தொடர்ச்சியாக எச்சரித்தேன். ஆனால் மஹிந்தவுடன் ஆரம்பத்திலிருந்து இருப்பவரக்ளான என்னைப்போன்றவர்கள் அண்மைக்காலமாக மஹிந்தவுடன் இருக்கவில்லை. வெளியில் இருந்து வந்தவர்கள் சிலரே இருந்தனர். அதாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒரு குழுவொன்று வந்திருந்தது. சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணிதான் மஹிந்தவை முழமையாக அழித்தது. அதிலுள்ள அனைவரும் அல்ல. மூன்று நான்கு பேர் தான் இந்த சதியை அரங்கேற்றினர். பெயர் குறிப்பிடத் தேவையில்லை.
மக்கள் அவர்களை நன்கு அறிவார்கள். அவர்கள்தான் இந்த நஞ்சை மஹிந்தவிற்கு புகுத்தினர். அதேவேளை எங்களது அணியிலும் சிறிசேனவுடன் நாளாந்தம் சந்தித்து ரகசியம் பேசும் நான்கு ஐந்து பேர் இருந்தனர். இந்த இரண்டு கும்பலுமே இணைந்து இந்த சதியை அரங்கேற்றியது. நான் முதல் நாளே இதனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஜி.எல்.பீரிஸின் வீட்டில் வைத்து நேரடியாகவே ஆட்சிக் கவிழ்ப்பை செய்ய வேண்டாம் என்று கூறினேன். நான் மாத்திரமல்ல சமல் ராஜபக்சவும் எச்சரித்தார்.
அதனையும் அவர்கள் செவி மடுக்காததால் நான் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என்பதையும், ஆனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாக்களிக்கின்றேன் என்றும் கூறினேன். நான் எச்சரித்தது போல் இன்று நடந்திருக்கின்றது. மஹிந்த பிரதமராக இரண்டு மாதத்திற்கும் குறைவாக காலப்பகுதியில் பதவி வகித்து இன்று அந்தப் பதவியில் இருந்தும் விலகிவிட்டார். பிரதமர் பதவியிலிருந்து விலகியதை நான் வரவேற்கின்றேன். ஏனெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைக்கு நாம் தலை வணங்க வேண்டும். இதனை நாம் அன்றும் கூறினோம். இன்றும் கூறுகின்றோம். தாமதமாகியாவது மஹிந்த பிரதமர் பதவியிலிருந்து விலக எடுத்த முடிவு மிகவும் சிறந்ததது. அது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்கமைய நாம் மீண்டும் மஹிந்தவை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை தெளிவுபடுத்தி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை வேட்பாளராக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்”.
இதேவேளை தாம் இன்று முதல் எதிர்கட்சியாக செயற்படுவதாகத் தெரிவித்த குமார வெல்கம, நாடாளுமன்றில் எதிர்கட்சிகளிடையே தங்களது கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருப்பதால், தங்களுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குமார வெல்கம –“மீண்டும் மஹிந்தவை பலமாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். கிராமங்களிலுள்ள மக்கள் இன்னமும் மஹிந்தவை விரும்புகின்றனர். அவர்களுக்கு நடந்ததை தெளிவபடுத்தி எம்மால் மஹிந்தவை மீண்டும் பலமான தலைவராக்க முடியும். அதற்காக எமது அணி தயாராகவே இருக்கின்றது. எதிர்கட்சித் தலைவர் பதவி எமக்க வழங்கப்பட வேண்டும். அதுதான் சரியானதும், யதார்த்தமானதுமாகும். மற்றையது கூட்டு எதிரணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது இணைந்திருக்கின்றது. அதனால் நாடாளுமன்றில் எதிர்கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எமக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை மஹிந்த தீர்மானிப்பார். என்னைப் பொறுத்தவரை எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவே தகுதியானவர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.