உண்மையை சொல்லி சிக்கலில் சிக்கிக்கொண்ட மைத்திரி!
11 Dec,2018
பணம் இல்லாததாலேயே மஹிந்த ராஜபக்சவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து மஹிந்த ராஜபக்சவை காட்டிக்கொடுத்திருப்பதாக ஜே.வி.பி பிரசாரச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை மைத்ரியின் இந்த கூற்றுக்களால் மைத்திரி – மஹிந்த கூட்டணியின் சூழ்ச்சி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஜே.வி.பி-யின் பிரசாரச் செயலாளர், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணரும் மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை ஏற்றுக்கொண்டு, நாட்டின் எதிர்கால நலன் கருதி உடனடியாக சரியான தீர்மானங்களை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜே.வி.பியின் தலைமைகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்தக் கட்சியின் பிரசாரச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்தத் தகவல்களை முன்வைத்திருக்கின்றார்.
விஜித – “113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள மஹிந்தவால் முடியாமல் போனமையாலேயே இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதாக உருவெடுத்தமைக்கு காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கமின்றி தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை 50 கோடி வரை சென்றமையே காரணம் எனவும் தெரிவித்திருக்கின்றார். பணம் கொடுத்தே உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டோம் என்பதை ஜனாதிபதி பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளார். அதனைவிட பணம் போதாமையாலேயே மஹிந்தவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்ற கருத்தின் ஊடாக மஹிந்த ராஜபக்சவையும் அவர் காட்டிக்கொடுத்தும் உள்ளார். அருகில் இருந்துகொண்டே மஹிந்தவை காட்டிக்கொடுத்துவிட்டார் மைத்திரி. மஹிந்த பணம் கொடுத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதை மைத்திரி அம்பலப்படுத்தியுள்ளார்”.
தனக்கு பிடித்த ஒருவரையே பிரதமராக நியமிக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்புக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இது நாட்டினதோ, நாட்டு மக்களினதோ நலன்களை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிய நிலையில், தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானம் என குற்றம்சாட்டியுள்ளார்.
“தனக்குப் பிடித்த ஒருவரையே பிரதமராக நியமிக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். அவருக்கு பிடித்த ஒருவரை பிரதமராக நியமிக்க முடியுமென யாப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்யைப் பெற்ற ஒருவரை, ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவர், பிரதமராக நியமிக்க வேண்டும். அதுவே சட்டம். சட்டவிரோத செயற்பாடுகளால் இன்று நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் செயற்படுவதால் இந்த குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே என ஜனாதிபதி சிறிசேனவும், மஹிந்தவும் கூறுகிறார்கள்.
அவ்வாறெனின், கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியே அந்த தீர்மானத்தை எடுத்திருக்க முடியும். எனினும் ஒன்றரை மாதங்களின் பின்னர் அந்த கருத்தை அவர்கள் ஏன் வெளியிடுகின்றார்கள்? அவர்கள் பணத்தைக் கொடுத்து உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைக்க முயற்சித்தார்கள் எனினும் அவர்களால் அது முடியாமற்போனது. ஆகவே பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறான ஒரு கதையை கூறுகின்றார்கள். ஆகவே இந்த சந்தர்ப்பத்திலாவது தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு, சூழ்ச்சி வெளிப்பட்டுவிட்டது என்பதையும் ஏற்றுக்கொண்டு, உண்மையை புரிந்துகொண்டு பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி முன்வர வேண்டும். தம்மால் இழைக்கப்பட்ட தவறினை உணர்ந்துகொண்டு நாட்டு மக்களுக்காக சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்”.
சிறிலங்கா ஜனாதிபதியும் – மஹிந்தவும் இணைந்து மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது போனதற்கு 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியல் சாசனத் திருத்தச் சட்டமே காரணமாக அமைந்துள்ளதால், குறித்த திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று மஹிந்த தரப்பினர் சூளுரைத்து வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக சிறிலங்கா ஜனாதிபதியும் கடந்தவாரம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். எனினும் அவசர அவசரமாக 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர், 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் மைத்ரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழிப்பதற்கு 100 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்ததை மறந்துவிட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஜனநாயகத்தையும், அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக இல்லாதொழிப்பது அவசியம் என்ற கோசத்துடனேயே மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார். 100 நாட்களுக்குள் அதனை நிறைவேற்றுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்ற பின்னர் அதனை அவர் மறந்து செயற்படுவதை அவதானிக்க முடிந்தது. 19ஆவது திருத்தச் சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். எனினும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று நான்கு மாதங்களின் பின்னரே அது நிறைவேற்றப்பட்டது. கனவுலகில் இருந்து விழித்துக்கொண்டவர் போல் ஜனாதிபதி பேசுகின்றார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.