இராணுவத்தின் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன
11 Dec,2018
திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் நேற்று (10) கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கர் காணியும் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் பாட்டாளிபுரம் பகுதியுல் 2 ஏக்கர் காணியும் தோப்பூர் பகுதியுல் 3 ஏக்கர் காணியும் சேருநுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சித்தாறு பகுதியில் 2 ஏக்கர் காணியுமாக மொத்தம் 12 ஏக்கர் காணி நேற்று விடுவிக்கப்பட்டது. காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் நேற்று (10) திங்கட்கிழமை பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.
————
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய பரீட்சார்த்திக்கு பதிலாக வேறொருவர் பரிட்சை எழுதிய தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உரிய பரீட்சார்த்தி மற்றும் அதற்கு உதவிய சந்தேக நபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) இடம்பெற்ற இடம் பெற்ற கணிதப் பாட பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது
சாய்ந்தமருது03 ஐச் சேர்ந்த பாடசாலையொன்றில் உரிய பரீட்சார்த்திக்கு பதிலாக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட சாய்ந்தமருது 13 ஐச் சேர்ந்த 19 வயது நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை இன்றைய தினம் (11) கல்முனை நீதவான் நீதிமன்ற முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தணமல்வில
இதேவேளை தணமல்வில, போதாகம பிரதேசத்திலுள்ள பாடசாலையில் வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 40, 45 வயதுடைய பரீட்சார்த்தி மற்றும் அவருக்கு உதவிய ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திஹகொட
மேலும், நேற்றைய தினம் (10) திஹகொட, புஹுல்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையில் கணித பாட பரீட்சையில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட கரதோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24, 25 வயதுடைய பரீட்சார்த்தி மற்றும் அவருக்கு ஆள் மாறாட்டத்தில் உதவிய சந்தேகநபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
————
பிரதமரின் அலுவலக செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவு நாட்டு மக்களிடையே தவறான ஒரு கருத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி இடைக்காலத் தைட உத்தரவை வழங்கிய தையடுத்து
நாட்டில் தற்போது பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று மக்கள் நினைக்கும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் அது அவ்வாறு அல்ல.
நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால தடை உத்தரவின் மூலம் அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்த நீதிமன்றம் எதிர் பார்க்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின்படி பிரதமரின் பதவி அப்படியே உள்ளது. ஆனால் அவரது செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வெளியிடப்படும் வரை இந்த நிலை அமுலில் இருக்கும். ஒருநபர் எந்தவொரு நிலையிலும் இல்லாதிருந்தால் அவரது நிலையுடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளை எவரும் கட்டுப்படுத்த முடியாது என்று தற்போதைய நிலையை முன்னாள் அமைச்சர் பீரிஸ் விளக்கிக் கூறினார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி தொடர்ந்தும் இருக்கிறது. ஆனால் அவரது பதவிக்கு உரிய செயற்பாடுகளும் அதிகாரமும் மேற்படி இடைக்கால தடையுத்தரவு மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிப்புடன் ஏற்றுக் கொள்வதாகவும் இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையைப் போன்று இதற்கு முன் ஏற்பட்டதில்லை.
முதல் முறையாக இந்த நாட்டு மக்கள் இரண்டு பிரதமர்களையும் இரண்டு அமைச்சரவைகளையும் காண நேர்ந்துள்ளது. எனவே இப்போதைய அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதைத் தவிர வேறுவழி இல்லை என்று அவர் மேலும் கூறினார்.