அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக சிறிசேனா மிரட்டல்- முன்னாள் மந்திரி தகவல்
05 Dec,2018
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரம சிங்கேவை அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அப்பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராகபக்சேவை நியமித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகபக்சேவுக்கு போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும் பிரதமராக தொடரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் ராஜபக்சேவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்துள்ளன. இருந்தும் அவரை சிறிசேனா நீக்கவில்லை.
அதேநேரத்தில் ரனில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்கவும் மறுப்பு தெரிவித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் அதிபர் சிறிசேனாவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது ரனில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் அதிபர் சிறிசேனா உணர்ச்சி வசப்பட்டார்.
‘‘என்னை மேலும் அதிக நெருக்கடிக்கு ஆளாக்காதீர்கள். இதுபோன்று தொடர்ந்தால் நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு எனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வேன்.
மனோ கணேசன்
எனது பொலொன்னறுவை பண்ணைக்கு செல்வேன்’’ என்றார். இந்த தகவலை முன்னாள் மந்திரி மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்