தேர்தல் நடத்த வேண்டும்- ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தல்
02 Dec,2018
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங் கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.
அதை ஏற்க ரனில் விக்கிரமசிங்கே மறுத்து விட்டார். ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்றும் அறிவித்தது.
அதையடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சே மீது எதிர்க் கட்சிகள் 2 தடவை கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இருந்தும் ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சிறிசேனா மறுத்து வருகிறார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும்படி அதிபர் சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் அரசியல் குழப்பம் தீர பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை வலியுறுத்தி உள்ளனர்.
இக்கருத்தை ஏற்கனவே அவர் கூறி இருந்தார். தற்போது மீண்டும் அதை வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தநிலையில் இலங்கை பாராளுமன்றம் வருகிற 5-ந்தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சே அரசு மீது 3-வது தடவையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் தீர்மானம் வெற்றி பெற்றால் புதிய பிரதமரையும், மந்திரிகளையும் அதிபர் சிறிசேனா நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.