"மஹிந்தவிற்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்" - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
01 Dec,2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இல்லாததை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான நேற்றைய சந்திப்பின் போதே, ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி இந்த விடயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால், அரசாங்கம் மாற்றமடைவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறும் தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத்தில் இலத்திரனியல் முறையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில், எட்டப்படும் முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணிக்கு கொள்கை ரீதியிலேயே ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணத்துடனேயே இந்த கொள்கை ரீதியிலான ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மாநாதன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகின்ற விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பணிகளை துரிதப்படுத்தல், தமிழ் பிரதேசங்களில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் ஸ்தபிக்கப்படும் பட்சத்தில், இவ்வாறான விடயங்கள் நேர அட்டவணையொன்றின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியிடமிருந்து எந்தவொரு சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழ் மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் கருத்தானது, ஓர் அரசியல் நாடகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்வசப்படுத்திக் கொள்ளும் நோக்குடனேயே இந்த அரசியல் கைதிகளின் விவகாரத்தை முன்னிலைப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதிக்கு ஒரு மணித்தியாலத்திற்குள் அரசியல் கைதிகளை விடுக்கும் அதிகாரம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்ந்த விடயங்களுக்கு தம்மை ஈர்த்துக் கொள்வதற்காக, அவர்கள் எடுத்துக் கொண்ட ஆயுதமே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.