தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திர அட்மிரல்
25 Nov,2018
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இதனை உறுதி செய்துள்ளார்.
11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சிக்கு கடற்படை தளம் ஒன்றில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அளித்தார், தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்த விசாரணைகளின் முக்கிய சாட்சியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் நேற்று அச்சுறுத்தப்பட்டார்.
கடற்படை உணவகத்தில் நேற்று பிற்பகல், லெப்.கொமாண்டர் லக்சிறி இருந்த போது அங்கு சென்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் ஏனைய ஐந்து கடற்படை அதிகாரிகளும் அவரை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முற்பட்டனர்.
அவரைத் துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவேன் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கோட்டே காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்மை அவர்கள் பிடிக்க முனைந்ததாகவும், எனினும் தான் தப்பி வந்து விட்டேன் என்றும், லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இவர் தாக்கப்பட்டதாக, கடற்படை அதிகாரிகள் கூறியுள்ள போதும், முறைப்பாட்டில் அச்சுறுத்தப்பட்டதாகவே கூறப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது.
மீண்டும் திரும்பும் ராஜபக்ச காலத்து அச்சுறுத்தல்
லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே, சிறிலங்கா கடற்படைத்தளத்தில் வைத்து தாக்கப்பட்டதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.அதில் அவர்,
“11பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான, லெப்.கொமாண்டர் லக்சிறி கலகம அட்மிரல் விஜேகுணரத்னவின் முன்பாக தாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அட்மிரல் விஜேகுணரத்னவும் ஒரு முக்கிய சந்தேக நபர். ராஜபக்ச காலத்து பயமும், அச்சுறுத்தலும் மீண்டும் திரும்புகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பு ரெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தியில்,
“அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு எதிராக சாட்சியமளித்த லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே நேற்று பிற்பகல் 2 மணியளவில் கடற்படைத் தலைமையக உணவகத்தில் இருந்த போது, முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் விஜேகுணரத்ன அங்கு வந்தார்.
கடற்படைத் தலைமையகத்துக்குள் லெப். கொமாண்டர் கலகமகேவைப் பார்த்த, அட்மிரல் விஜேகுணரத்ன, மோசமான மொழியில் கத்தியதுடன், அவரை இழுத்து வருமாறும் உத்தரவிட்டார்.
அப்போது, லெப்.கொமாண்டர் கலகமகே, மோதலைத் தவிர்க்க தப்பி ஓடத் தொடங்கினார். அட்மிரல் விஜேகுணரத்னவின் உதவியாளர் ஒருவர், கைத்துப்பாக்கியுடன் அவரைத் துரத்தினார்.
அவர் சுட்டுவிடுவார் என்ற அச்சத்தில் துப்பாக்கியைத் தட்டி விட்டு விட்டு, கடற்படைத் தலைமையகத்துக்கு வெளியே தப்பி ஓடினார்.
இந்த மோதலின் போது, லெப்.கொமாண்டர் கலகமகேயின் அலைபேசி கீழே விழுந்தது. அதனை அட்மிரல் விஜேகுணரத்னவின் உதவியாளர் பறித்துக் கொண்டார்.” என்று கூறப்பட்டுள்ளது.
நாளை விசாரணை
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக, நாளை வாக்குமூலம் அளிக்க வருமாறு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது