தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: முக்கிய சாட்சி மீது தாக்குதல்?
25 Nov,2018
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளரை, பாதுகாப்பு படையணியின் பிரதானி அட்மிரல் ரவீந்திர குணவர்தன தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் லக்சிறி கலகமகே மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு கடற்படை தளமொன்றில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அடைக்கலம் கொடுத்ததாக வாக்குமூலம் வழங்கப்பட்டது. அதனடிப்படையின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குறித்த விசாரணையில், பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு எதிராக கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் லக்சிறி கலகமகே சாட்சியமளித்துள்ளார்.
இதனடிப்படையில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நாளைய தினம் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர். கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, குறித்த இளைஞர்கள் அனைவரும் பணத்திற்காகவே கடத்தப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.