17 விபச்சார விடுதிகளில் 59 பேர் கைது
18 Nov,2018
!!
சட்டவிரோதமான முறையில் உரிய பதிவுகளின்றி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் மற்றும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 17 விபச்சார விடுதிகள், நேற்று நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரையான எட்டு மணிநேர காலப்பகுதியில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
மேல்மாகாண வடக்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் விசேட உத்தரவுக்கமைய எட்டு மணி நேர காலப்பகுதியில் கிரிபத்கெட, நிட்டம்புவ, ஜாஎல, மாபாகே, வெயங்கொட,பியகம, சீதுவ, நீர்கொழும்பு, வத்தளை, களணி, கொச்சிகடை, கம்பஹா மற்றும் யக்கல பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த புலனாய்வு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராலேயே குறித்த 59 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 தொடக்கம் 45 வயதுக்குட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களின் குறித்த நிலையங்களின் முகாமையாளர்களாக செயற்பட்ட 8 பேரும், விபச்சாரத்துக்கு தயாராகவிருந்த 42 பெண்களும் 9 ஆண்களுமென 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை கம்பஹா, மஹர, அத்தனகொல்ல, நீர்கொழும்பு மற்றும் வத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.