கொலைச்சதிக்காரர்களின் உண்மை முகம் இன்று வெளிப்பட்டது – அநுரகுமார
16 Nov,2018
நாடாளுமன்றத்தில் கொலை சதித்திட்டத்தினை மேற்கொண்டிருந்தவர்கள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களே என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மற்றும் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை தாக்கி கொலை செய்ய முற்பட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சி செய்யப்பட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார். அவருடைய தரப்பினரே அந்த கொலைச்சதிக்காரர்கள் என இன்று உறுதியாகியுள்ளது.
காரணம் அந்த இரு தரப்பினர் தவிர ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது இருக்கைகளில் அமைதியான முறையில் அமர்ந்திருந்தனர்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.