ஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல : பாராளுமன்றில் மஹிந்த கொந்தளிப்பு
15 Nov,2018
குழந்தையாக இருக்கும் போதே பாராளுமன்றில் பார்வையாளர் பகுதியில் இருந்து பாராளுமன்ற அமர்வுகளை பார்த்துள்ளேன். அமைச்சு பதவிகளையும், பிரதமர் பதவிகளையும், ஜனாதிபதி பதவியையும் வகித்த எனக்கு தற்போது கிடைத்துள்ள பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல.
ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒருவருடம் அரசாங்கத்தில் இருந்திருந்தால் நாடு அழிவடைந்திருக்கும். நாட்டை பாதுகாக்கும் பொறுப்புடனே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் 26 ஆம் திகதி அப்போதைய பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக பதவி நீக்கியதுடன் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை நியமித்தார்.
இதனை அடுத்து நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்திருந்தார்.
எனினும், இதற்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தையடுத்து, ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்ததற்கமைய நேற்று க்காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்பட்டது.
நேற்று பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கபட்டதை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து சபையை இன்று காலை 10 மணி வரை சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் சபை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமான போது, பிரதமர மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரையாற்ற சபாநாயகர் அனுமதி வழங்கினார்.
எனினும் எதிரணியினர் கூச்சிலிட்டதால் மஹிந்த ராஜபக்ஷ கடும் கோபத்துடன் தனது உரையை ஆரம்பித்தார்.
எனக்கு இது ஒன்றும் பெரிதல்ல. நான் ஏற்கனவே பிரதமர், ஜனாதிபதி பதவிகளை வகித்துள்ளேன். நாடு அதல பாதாளத்தை நோக்கி செல்வதை தடுக்கவே நான் பிரதமராக பதவியேற்றேன். இன்னும் ஒன்றரை வருடங்கள் தானே இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒருவருடம் அரசாங்கத்தில் இருந்திருந்தால் நாடு அழிவடைந்திருக்கும். ஆனால் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு என்னிடம் இருந்தமை காரணத்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
நேற்று இடம்பெற்ற எனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற சட்டங்களுக்கு முரணானது.
பிரதமர், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாபதிக்கு தான் உள்ளது. மாறாக சபாநாயகருக்கு இந்த அதிகாரங்கள் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நாட்டின் அரச சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. மத்திய வங்கியில் பாரிய கொள்ளை இடம்பெற்றுள்ளது. மேலும் ஜனாதிபதியை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சியனர் சதி செய்துள்ளனர்.
இதன் காரணமாக அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி எனக்கு இந்த பதவியை வழங்கினார்.
தேர்தல்கள் நடாத்தாமல் காலம் தாழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சியினர் மீண்டும் தேர்தலை நடத்த விடாமல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். உலக வரலாற்றில் தேர்தல் வேண்டாம் என கூறுபவர்கள் இவர்கள் தான்.
பாராளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களும் என்னுடன் கைகோர்க்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் நாளாந்த வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது.
பெற்றோல் விலையை அதிகரித்துள்ளனர். இன்று இரவு மீண்டும் நான் பெற்றோல் விலையை குறைப்பேன்.
சபாநாயகராக இருந்தும் உங்கள் கட்சி சார்பாகவும் உங்களது மேற்கத்தேய நண்பர்கள் சார்பாகவும் நீங்கள் செயற்படுவது வேதனைக்குரியது விடயம். ”என தெரிவித்தார்.