தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!
11 Nov,2018
தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப் பெறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என, வடக்கு மக்களும் புலம்பெயர் சமூகமும் நன்கு அறிந்துள்ளது.
பெரும்பான்மை சிங்கள மக்கள் பிரதமர் மஹிந்தவுடனேயே இருக்கிறார்கள். அவர்கள் மஹிந்தவையே நாட்டின் தலைவராக நேசிக்கிறார்கள்.
எனவே, வடக்கில் சுமூக நிலையை ஏற்படுத்தி அங்கு அபிவிருத்திகளைச் செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து செயற்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் சமூகத்துடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றது. அவர்களை சிறுபான்மையினத்தவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களும் இந்த நாட்டின் இன்னொரு சமூகம்.
அவர்களுக்கும், அவர்களது சமூகத்தினருக்கும் சரியான இடத்தைக் கொடுக்க வேண்டும். எனினும் நாம் பயங்கரவாதிகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு அவர்களது பாணியில் பதில் கொடுப்போம்” என்றார்.