14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்தவுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு
07 Nov,2018
எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடப்படும் என என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற கட்சிதலைவர்களின் சந்திப்பின் போது ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
எதிர்வரும் 14 ம் திகதி பாராளுமன்றத்தில் சம்பிரதாய அமர்வொன்று மாத்திரமே இடம்பெறவேண்டும் எனவும் பாராளுமன்ற பாரம்பரியத்தினை பின்பற்றி அன்று அதனை ஒத்திவைக்கவேண்டும் எனவும் ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது என சட்டமெதுவும் இல்லை என ஐக்கியதேசிய கட்சியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் சபாநாயகரே அதன் நிகழச்சி நிரலை தீர்மானிக்கவேண்டும் என ஏனைய கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையிலேயே கருத்துதெரிவித்துள்ள சபாநாயகர் கருஜெயசூரிய 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளனர் எனவும் 14 ம் திகதி இதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதிசெய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்காக தேவைப்பட்டால் நிலையியல் கட்டளைசட்டங்களை இடைநிறுத்த தயார் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.இதேவேளை நிகழ்ச்சிநிரல் குறித்து சர்ச்சை எழுந்தால் இந்த விடயத்தை எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.