மகிந்தவுக்காக கட்சியின் யாப்பில் திருத்தம் செய்கிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி?
07 Nov,2018
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
நாளை பிற்பகல் 4 மணியளவில் பத்தரமுல்லவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்பதை சிலகாலமாக தவிர்த்து வந்த மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது முக்கிய அம்சமாகும்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில், கட்சியை மறுசீரமைப்பது மற்றும், கட்சியின் யாப்பில் திருத்தங்களைச் செய்வது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்பை அளிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.