மைத்திரியுடன் ஐ.நா.செயலாளர் தொலைபேசியில் உரையாடியதாக ஐ.தே.க. உறுப்பினர் ஹர்சா டி
02 Nov,2018
சில்வா கூறுகின்றார்
நாடாளுமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பு
இலங்கையின் அரசியல் நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கின்ற நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 7ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்திருப்பதை தனக்கு அறிவித்ததாக இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டில் உiயாற்றிய போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக மைத்திரிபால சிறிசேன நியமித்ததையடுத்து பாரிய அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டது. அதனையடுத்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதிவரை மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்திருந்தார்.
எனினும் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டித் தீர்மானம் எடுக்குமாறு சர்வதேச நாடுகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றன.
இதுதவிர, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உட்பட அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி வருகின்றன.
இதற்கமைய இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரியவை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.
இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118 பேர் கலந்துகொண்டதாக நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்
நேற்று வியாழக்கிழமை இரவு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அரசயல் யாப்பு வதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது என ஹர்சா டி சில்வா இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும் ஐ.நா செயலாளர், மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியதாகவும் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.
ஆனால் ஐ.நா.செயலாளர் நாயகம் தொலைபேசியில் உரையாடியமை குறித்து இலங்கை ஜனாதிபதிச் செயலகம் ஊடகங்களுக்கு எதுவுமே கூறவில்லை