இலங்கை நாடாளுமன்றம், 5 ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிப்பு தற்போது 7 -ஆம் தேதி என தகவல்
02 Nov,2018
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென விக்ரமசிங்கேவை நீக்கினார், சிறிசேனா. மேலும் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தை வருகிற 16 ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக சிறிசேனா அறிவித்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு உலக நாடுகள் கண்டனமும், கவலையும் வெளியிட்டு இருந்தன. குறிப்பாக இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்கா, அங்கு ஜனநாயக மதிப்பீடுகளை காக்குமாறு கேட்டுக்கொண்டது. இதைப்போல ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற முடக்க உத்தரவை நேற்று சிறிசேனா திரும்ப பெற்றார். அத்துடன் வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான உத்தரவையும் அவர் பிறப்பித்தார். அதன்படி 5-ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை நாடாளுமன்றம் 7 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை 7 ஆம் தேதியன்று கூட்ட அதிபர் முடிவு செய்துள்ளதாக இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா, கட்சித்தலைவர்களுடனான கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம், 5 ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது 7 -ஆம் தேதி கூட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.