மகிந்த – மைத்திரி கூட்டு திங்களுடன் ஆட்டம் முடியும்
02 Nov,2018
மைத்திரி – மஹிந்தவின் சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும். 5 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியை இராஜநாமா செய்வாரானால் குறித்த ஒரு வருடத்துத்துக்கான ஜனாதிபதியினை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி, நான்கரை வருடங்கள் நிறைவடையும் வரை ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உரிமை இல்லை எனவும் சுட்டிகாட்டியுள்ளது.
ஜனநாயக போராட்டத்தின் முதல் போராட்டத்தில் வெற்றிகொண்டுள்ளதோடு நாட்டில் தூய்மையான அரசியல் கலாசாரத்தை கொண்டுவரும் வரை ஐக்கிய தேசிய கட்சியின் இந்த போராட்டம் முடிவடையாது என்றும் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனை குறிப்பிட்டார்.
பெரும்பான்மையை நிரூபித்து பெரும்பான்மை பலத்தை பெற்ற ஒருவர் பிரதமராக நியமிக்கும் வரை அலரிமாளிகையை விட்டு வெளியேற போவதில்லை என சவால் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.