இலங்கையில் தஞ்சம் அடைந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் 2 வருடங்களுக்கு பின் நாடு திரும்பினார்
01 Nov,2018
மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிபர் முகமது நஷீத். அதிபராக இருந்த நஷீத், கடந்த 2012ம் ஆண்டு நீதிபதி ஒருவரை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனால் அவர் தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு 13 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முறையான நடைமுறை பின்பற்றாமல் நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
அவர் சிறையில் இருந்து இங்கிலாந்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றபொழுது அவருக்கு அங்கு தஞ்சமளிக்க அந்நாடு முன்வந்தது.
தொடர்ந்து, சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க கடந்த 2 வருடங்களாக நஷீத் இலங்கையில் தஞ்சம் புகுந்த நிலையில், சமீபத்திய அதிபர் தேர்தலில் யாமீன் அப்துல் கயூம் தோல்வியை அடுத்து நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து அவர் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு இன்று வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.