இலங்கை தென்கிழக்கு பல்கலை. காலவரையின்றி மூடல் - விநோத போராட்டம் எதிரொலி
24 Oct,2018
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் புதன்கிழமை முதல், மறு அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டுள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இதன் காரணமாக, பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடிவருதை அடுத்தே பல்கலைக்கழகத்தை மறு அறிவிப்பு செய்யும் வரையில், மூடும் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், பதிவாளர் சத்தார் தெரிவித்தார்.
பகடிவதையில் (ராகிங்) ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மேற்படி சிங்கள மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்துள்ளனர்.
இதன் காரணமாக, பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து அகற்றுமாறு, போலிசாருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
ஆயினும், நீதிமன்றக் கட்டளையினை நிறைவேற்றுவதற்கு, போலிஸார் தவறி விட்டதாகவும், அதனாலேயே பல்கலைக்கழகத்துக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக சமூகம் குற்றம் சுமத்துகிறது.
நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், இது விடயத்தில் தமது கடமையினை மேற்கொள்ளத் தவறிய போலீஸாரைக் கண்டித்தும், திங்கள்கிழமை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பல்கலைக்கழத்திலும், பல்கலைக்கழக விடுதிகளிலும் தங்கியுள்ள மாணவர்களை புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர், வெளியேற வேண்டுமென, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் 4.00 மணிக்குப் பின்னர், பல்கலைக்கழகத்தினுள் தங்கியிருப்பது சட்டவிரோமான நடவடிக்கையாகக் கருதப்படும் எனவும், நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பல்கலைக்கழத்திலிருந்து மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.
ஆயினும், நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்கள், தொடர்ந்து அங்கேயே இருந்து வருகின்றனர்.