ஆவாக்குழுவுக்கு ஆயுதப்பயிற்சி; தமிழர்களை அழிக்க இந்தியா மீண்டும் சதி
18 Oct,2018
!
இலங்கையில் இந்திய புலனாய்வு சேவையான றோ புலனாய்வு சேவை செயற்பட்டு வருவதாகவும், இந்தியாவில் ஆவா குழுவுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரின் பெயர் ராஜேந்திரகுமார்.
அவர் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் அரசியல் புகலிடம் கோரி இலங்கைக்கு வந்துள்ளார்.
அன்று முதல் றோ புலனாய்வுப் பிரிவின் உளவாளியாக செயற்பட்டு வந்துள்ளார். இலங்கையில் தொழில் புரியாது, றோ வழங்கிய பணத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த நபர் கைதுசெய்யப்பட்டதும் அவர் மனநோயாளி என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. ஒரு நபர் வழங்கும் தகவல்கள் செல்லுப்படியற்றதாக கையாளும் நடவடிக்கைதான் அவரை மனநோயாளி என அறிவிப்பது.
அதுதான் இங்கு நடந்துள்ளது. றோ நாட்டிற்குள் செயற்பட்டு வருவதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆவா குழு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்று வருகிறது. ஒரு புறம் ஆவா குழுவுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி பலப்படுத்தப்பட்டு வருகிறது.
மறுபுறம் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தொடர்பான விடயத்தில் இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதனை றோ உறுப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இருந்த ஸ்னைப்பர் துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன. குரல் பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் நோக்கும் போது றோ அமைப்புடன் இணைந்த நடவடிக்கை ஒன்று இருப்பதை காட்டுகிறது. புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து கொலை சதித்திட்டம் இருப்பதை காணமுடிகிறது.
தன்னை கொலை செய்யதிட்டமிடும் பொலிஸார், பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை தன்னுடன் வைத்துக்கொண்டு தற்போதைய ஜனாதிபதி மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.
நாட்டின் தலைவர், முன்னாள் தலைவர் ஆகியோரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ள நிலையில், நாட்டின் ஆட்சியாளர்கள் எதுவும் நடக்காதது போல் இருந்து வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. உலகில் எந்த நாடும் பயங்கரவாத்தை ஊக்குவிக்காது. தமது நாட்டு படையினருடன் போரிட்டு, சிவில் மக்களை கொன்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு எந்த நாடும் இழப்பீடு வழங்காது.
ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது.
தமது நாட்டை பிரிக்க பயங்கரவாத செயலில் ஈடுபட்ட அமைப்புக்கு இழப்பீடு வழங்கும் ஒரே நாடு இலங்கை. பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது பயங்கரவாதத்தை மேலும் மேலும் ஊக்குவிப்பதாகும்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்க மாட்டோம் என்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாம் சத்தியப் பிரமாணம் செய்கிறோம்.
ஆனால் அரசாங்கம் தற்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக்கி இந்தியா குளிர்காயப்பார்க்கின்றதா என்ற சிந்தனை, கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.