வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது!
15 Oct,2018
வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 600 நாட்களை எட்டியுள்ளது.
இதனையடுத்து அவர்கள் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து விஷேட வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பேரணியாக பிரதான வீதி வழியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் தீச்சட்டி ஏந்தியவாறு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிடுகையில், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பதாதைகளைத் தாங்கியவாறும் 600ஆவது நாட்களாக நீதிக்காகப் போராடுகின்றோம்.
அரசியல் கைதிகளின் தாய்மாரும், காணாமல் ஆக்கப்பட உறவுகளின் தாய்மாரும் வீதியோரத்தில் தான் நிற்கின்றார்கள்.
எங்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தான் நாங்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.